பத்தினிப் பெண்கள்

முதலிரவில்,
என் காலில் விழுந்து வணங்கிய அந்த கணங்களிலேயே
நொறுங்கிப்போனது
உன் மீதான என் ஒட்டு மொத்த மரியாதையும்.


ஒவ்வொரு நாள் காலையிலும்,
தாலியைத் தொட்டு ஒற்றிக் கொள்ளும் வேளைகளில்,
பொய்த்துக் கொண்டிருக்கிறது
மீதமிருக்கும், என் கொஞ்ச நஞ்ச எதிர்பார்ப்புகளும்.

புடவைக் கடைகளிலும், நகைக் கடைகளிலும்,
உன் முகம் அடையும் பிரகாசத்தை
நம் வீட்டு படுக்கையறையில் கூட
இதுவரை கண்டதில்லை.

உப்புப் போட மறந்ததையும்,
சர்க்கரை அதிகமாய்ப் போட்டதையும்,
தாண்டி
என்னிடம் பேச
விஷயங்களே உனக்கு தோன்றியதில்லை.

‘அவரு’, ‘என் வீட்டுக்காரர்’
உன் உதடுகள்
உச்சரிக்க மறுத்து கூசுமளவிற்கு
என் பெயர்
கெட்ட வார்த்தையாகிப் போனது உனக்கு.


“ம்ம்ம்…….. வந்து
அடுத்த வாரம் வீட்டுக்குப் போய்ட்டு வரட்டுமா”
தயங்கி தயங்கி
கேட்கும் ஒவ்வொரு முறையும்
உன் குடும்பத்திலிருந்து அந்நியப்பட்டுப் போகிறேன்.

“வாங்க… உட்காருங்க… காஃபி சாப்பிடுங்க…”
இயந்திரத் தனமாய்
இம்மூன்றைத் தவிர வேறெதையும்
என் நண்பர்களிடத்தில் பேசியதாய்,
எனக்கு நினைவில்லை.

தோழியென்றோ, தோழனென்றோ,
ஒருவருமே இல்லாமல்
உன்னுடைய ஒட்டு மொத்த உலகமே
கணவனும், புகுந்த வீடும் மட்டுமே
என்பதில் நீ வேண்டுமானால்,
பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

என் தந்தையின் எதிரே
அமர்ந்து பேச மறுக்கும்
ஒவ்வொறு முறையும் நினைவுறுத்துகிறாய்
உன் தந்தையின் முன்பு மட்டும்
நீ கால் மீது கால் போட்டமர்ந்து
பேசுவதை.

வழி வழியாய் வந்ததையே
பார்த்தோ…
கேட்டோ…
பழகியோ…
நீயும்
‘வத்தக் குழம்புக்குள்’
உன் உலகை
தேடிக் கொண்டிருக்கிறாய்.

போர்த்திக் கொண்டு,
தூணின் பின் நின்று,
நிலம் பார்த்து
பதில் சொல்லும் பழக்கம்
நம் பாட்டிகளோடு
போகட்டும்.

வந்து விடு.
கற்புக்கரசிகளும், பத்தினிப் பெண்களும்
காவியங்களோடு போகட்டும்.
சரி, தவறுகள் செய்யும்
சாதாரண மனுஷியாய்,
உன் வட்டத்தைத் தாண்டி
வெளியே வந்து விடு.


பி.கு : இந்த கவிதை(கண்டுக்காதீங்க விடுங்க) தவறாகவும் புரிந்து கொள்ளப் படலாம் என்ற பயத்தில் இதை எழுதுகிறேன். இது திருமணத்திற்கு பின்பு ஒட்டு மொத்தமாய் தடம் புரண்டு போன ஒரு சில பெண்கள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கமே தவிர, நேரடியாகவோ மறைமுகமாகவோ, பெண்களை மட்டம் தட்டும் முயற்சியல்ல.

அப்படியே என்ன நினைக்கறீங்கன்னும் சொல்லிட்டுப் போங்க.

பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது . 30 மறுமொழிகள் »

குப்பையாய் ஒரு கவிதை

குப்பையாய் ஒரு கவிதை

உனக்கென்ன?
உன் பாடு பரவாயில்லை.

என்னைப் போல
மொட்டை மாடி இரவின்
நிலா வெளிச்சத்தில்,
வார்த்தைகளை தேடிப்பிடித்து,
விரயம் செய்து,
நடு நடுவில்
கண்ணே , மணியே சேர்த்து,
கவிதை எனும் பெயரில்
குப்பையாய் ஒன்றை
கொடுக்க வேண்டிய தேவை
எதுவும் இருப்பதில்லை.

நான் தரும் குப்பையை
வாசித்து விட்டு,
மெல்ல முகம் சுளித்து,
கண்களை சுருக்கி,
செல்லமாய் சிணுங்கி,
“ச்சீ போடா”
என நீ சொல்லும்
ஒற்றை சொல்லே போதும்.

அதற்கே நான் பாதி செத்து விடுகிறேன்.

பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது . 5 மறுமொழிகள் »

என்னையும் ரசிகனாக்கிய என் காதலிக்கு நன்றி அதெப்படி…

என்னையும் ரசிகனாக்கிய என் காதலிக்கு நன்றி

அதெப்படிறா மாமூ!
இவளுங்களால மட்டும் இதெல்லாம் முடியுது?

“குருவி கூடு கட்டறதை ரசிக்கறது,
மழையைப் பார்த்தா துள்ளி குதிக்கறது,
நாய்க்குட்டியை ஓட விட்டு துரத்தி பிடிக்கறது,
குழந்தைங்களைப் பார்த்தா உலகத்தையே மறந்துடறது,
சின்ன காயத்துக்குக் கூட மும்தாஜ் கணக்கா
‘ஐயோ பாவம்’னு உருகறது,
பட்டம், பலூன், பஞ்சு மிட்டாய்,
நெல்லிக்காய் னு
வரைமுறை இல்லாமல்
எதைப் பார்த்தாலும் ஆச்சர்யப்படுவது.
இதெல்லாம் ரொம்ப ஓவர்றா !”

நானும் சொல்லித் திரிந்தவன்தான்.
நாயர் கடையில் நின்று கொண்டு,
கூட்டமாய் செல்லும் பெண்களைப் பார்த்து,
நானும் சொல்லித் திரிந்தவன்தான்.

ஆனால்,
அன்றொரு மதிய வெயிலில்,
காரணமில்லாமல் தோன்றிய,
யாருமே மதிக்காத,
அந்த மங்கிய வானவில்லைப் பார்த்து,
“வாவ்! எவ்ளோவ் நல்லா இருக்கு பாரேன்
ச்சோ ச்வீட் !”
என்று நீ சொன்ன போது,
வானவில்லை விட, நீ சொன்ன
வார்த்தைகளை ரொம்ப ரசித்தேன்.

அன்று இரவு என் நண்பனிடம் கூறினேன்.
“ஒண்ணுத்துக்கும் உதவாத விஷயங்களை
ரசிக்கறதுல கூட
ஒரு சுகம் இருக்குடா மச்சான் !”

பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது . 2 மறுமொழிகள் »

போடா லூசு

போடா லூசு.
பின்ன எதுக்குடா தெரியாத மாதிரி நடிச்ச?
சிணுங்கலாய்க் கேட்டாய் நீ.

தெரிந்தே இருந்தாலும்,
உன்னை சீண்டி விட்டு,
அழ வைத்து, வேடிக்கை பார்த்து,
எதிர்பார்க்காத ஒரு நொடியில்
நான் காட்டிடும் அந்த வெள்ளி கொலுசை,
உதடுகள் குவித்து,
விழிகள் விரிய, இமைகள் படபடக்க,
நீர்த்துளிகள் மெல்ல எட்டிப் பார்க்க,
ஆச்சர்யமும், ஆனந்தமும் கலந்த கலவையாய்,
நீ நின்றிடும்
அந்த ஒரு சில நொடிகளை ரசிக்கத்தான்
என்று எப்படி சொல்வது?

மெல்லச் சிரித்து, அழுத்திச் சொல்கிறேன்.
மறக்க முடியுமா உன் பிறந்த நாளை?
போடி லூசு!

போடி லூசாம்!
எனக்குத் தெரியாதா?
என்னுடைய எல்லா பாவங்களையும் ரசிப்பவன் நீ!
மெல்ல எட்டிப்பார்த்த அந்த நீர்த்துளிகளைத் தவிர,
அந்த சிணுங்கல்,
அந்த கோபம்,
அந்த அழுகை, ஆச்சர்யம், ஆனந்தம்
எல்லாமே பொய்யாய்,
உனக்காகத்தான்டா! எல்லாம் உனக்காகத்தான்!

நான் எப்படிடா நினைப்பேன்?
நீ என் பிறந்த நாளை மறந்திடுவேன்னு.
போடா லூசு.

பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது . 5 மறுமொழிகள் »