அன்றைக்கும் பொழுது விடிந்தது. சூரியனின் கதிர்கள் அழுத்தமாய் என்னைத் தீண்டித்தான் சென்றது. வெய்யில் சுளீரென நெற்றியில் உரைத்தது. கண்களை திறக்கலாமா வேண்டாமா என்று மனது பட்டி மன்றம் நடத்தியது. “எழுந்து போயேன்” மூளை என்னைக் கெஞ்சியது.
சரி.எழுந்து?……..
மனது யோசித்துச் சொன்னது. முதலில் குளி. நேற்றைப் போலவே இன்றும் ஏதாவது குழம்பு வை. துவைத்துக் காயப் போட்ட உனது புடவைகளை மடித்து வை. எச்சில் பருக்கைகள் நிறைந்து கிடக்கும் தட்டுக்களை கழுவி வை. வேலைக்குப் போன உனது தந்தையும், பக்கத்து வீட்டுப் பெண்ணின் விசேஷத்திற்குப் பட்டுப் புடவை சரசரக்கச் சென்ற அம்மாவும் திரும்பி வரும் வரை, டீவி பார். வாரமலர் நடுப்பக்க கிசுகிசுக்களைப் படி. பொழுது போகும். இல்லைன்னா மல்லிகா பத்ரிநாத் “மிளகு இட்லி செய்வது எப்படி?” ன்னு பெண்கள் மலரில் எதாவது டிப்ஸ் கொடுத்திருப்பார் அதைப் படி. அதுவும் இல்லையா? மறுபடியும் படுத்துத் தூங்கு.
இதைத்தானே நேற்றும் செய்தேன்?
ஆமாம் நேற்றும் இதைத்தான் செய்தாய். இன்றும் இப்படித்தான். ஏன்…. நாளையும் இப்படித்தான்.இதைத்தாண்டி வேறு எதுவும் உனக்கு விதிக்கப் பட்டிருப்பதாக எனக்குத் தோன்ற வில்லை. வேறு என்ன செய்யத் தோன்றுகிறது உனக்கு?
நான் வேணா தையல் கத்துக்கிட்டுமா? டெய்லரிங், எம்பிராய்டரி இப்படி ஏதாவது பண்ணிட்டுருக்கலாமே.இல்லைன்னா இந்த பூ படம் எல்லாம் வரைஞ்சு செவுத்துல ஃபிரேம் பண்ணி மாட்டுவாங்களே. அதைக் கத்துக்கிறேன்….
ஹ்ம்ம்ம். தையல் மெஷின். உன்னை மாதிரி ஆளுங்களுக்கு கரெக்டா இருக்கும். சரி என்ன பூவை வரைஞ்சு நீ என்ன பண்ணப் போற? அப்படியே நீ பூ வரைஞ்சாலும், அதை யாரும் வாங்குவாங்களா? நீ பேசாம டெய்லரிங்கே கத்துக்கோ……
ஹ்ம்ம்ம் சரி. ஆனா இன்னும் எத்தனை நாளைக்கு?
என்ன இன்னும் எத்தனை நாளைக்கு?
இப்படி வெளில எங்கேயும் போகாம, வீட்டுக்குள்ளேயே, வாரமலர், தையல் மெஷின், அவரைக்காய் குழம்பு ன்னு காலத்தை ஓட்டறது…..
வெளிலயா. போலாமே யார் வேணாம்னா. கோயிலுக்குப் போ. இல்லைன்னா பக்கத்து வீட்டு அக்கா கூட ஏதாவது படத்திற்குப் போ.
படமா வேணாம்பா. புருஷன் செத்த கவலை இல்லாம படம் பார்க்க வந்திருக்கா பாருன்னு எதிர்த்த வீட்டு மாமி சொல்லுவா. அதுவுமில்லாமல் படத்தில ஜோடியா யாரையாவது பார்த்தா உள்ள என்னமோ பண்ணுது. எப்படியும் ஃபர்ஸ்ட் நைட் சீனோ இல்லை டூயட்னு ஒரு கவர்ச்சிப் பாட்டோ இருக்கும். அதைப் பார்த்தா நைட் தூங்கவே முடியாது. அதனால படம் வேணாம். நான் இப்படியே சன் டீவியிலயே பார்த்துக்கறேன்.
அதுவும் சரிதான். வேணும்னா எதாவது விசேஷத்துக்குப் போ. ஆனா கவனமா இருந்துக்கோ. எந்த விசேஷத்துலயும் முன்னாடி நிக்காத. எங்கயாவது தூண் ஓரமாவே நின்னுட்டு இருந்துட்டு வந்துடு. உதவிதானே செய்யறோம்னு நினைச்சுக்கிட்டுப் போய் மேடையில போய் நிக்காத.
ஆமா ஆமா. அன்னிக்கே பாலா அண்ணன் வீட்டு குழந்தைக்கு பெயர் சூட்டுற விழாவிற்கு போய், குழந்தையை ஆசையா கொஞ்சிட்டிறுக்கறப்ப, அவங்க மாமியார், “நீ எல்லாம் குழந்தையை தொடாதம்மா”ன்னு ஒரு மாதிரி பேசிட்டாங்க. அதனாலதான் இன்னிக்கு பக்கத்து வீட்டு விசேஷத்துக்கும் நான் போகலை. அம்மா மட்டும் போய் இருக்காங்க.
ஹ்ம்ம் தெரியுதுல்ல.அப்புறம் என்ன? ஒண்ணு தெரிஞ்சிக்கோ. உனக்கு இதுதான். நீ இப்படித்தான் இருக்கணும். அவங்க யாரும் மாற மாட்டாங்க.
ஏன் எல்லாரும் இப்படி இருக்காங்க. நான் என்ன தப்பு செஞ்சேன்? என் மாமியாரு கூட எப்படிம்மா இருக்கேன்னு கேட்டு 2 மாசமா ஒரு போன் கூட பண்ணலை. எனக்கு மட்டும் ஏன் இப்படி? நானும் மத்தவங்க மாதிரி சந்தோஷமா இருந்தவதான. ஒரே நாள்ல ஒட்டு மொத்தமா எல்லாத்தையும் பிடுங்கி மூலைல உட்காருடீன்னு சொன்னா நான் எங்கே போவேன்.
உண்மையை சொல்லணும்னா என் புருஷன் செத்துப் போய்ட்டான் ங்கறதை விட நாளைக்கு நான் யாரு? ங்கறதை நினைக்கிறப்பதான் எனக்கு அழுகையா வருது.
சரி விடு. இதை இப்படியே வெச்சுக்கோ. வெளில சொல்லாத. எங்க காலம் மாதிரி வெள்ளைப் புடவை கட்ட சொல்றோமா? பூ வெக்க வேணாம்னு சொல்றோமா? இல்லை சினிமா பார்க்க வேணாம்னு சொல்றோமா? இப்போ நாங்க எல்லாம் இல்லை. என்னமோ இவ ஒருத்திதான் அறுத்துக் கட்டினவ மாதிரி பெரிசா பேசறா……..அப்படின்னு ஊர்ல இருக்கிற உன் அப்பத்தாவே கேட்கும்.
மயிரு! போய் சொல்லு என் அப்பத்தா கிட்ட. “வாழறதுங்கறது உயிரோட இருக்கறது இல்லை. அதுக்கும் மேல….”