அப்போதுதான் எழுத்து கூட்டிக் கூட்டிப் படிக்கக் கற்று கொண்டிருந்த அந்த ஆரம்ப கால நாட்களில், ஏதேச்சையாக ஒரு நாள் என் கையில் கிடைத்த “சிறுவர் மலர்” பின்னாளில் என் மேல் ஏற்படுத்திய தாக்கங்கள் ஏராளம். ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையிலும், மற்ற எவருக்கும் முன்பு முதலில் நான் மட்டுமே அதை படித்து விட வேண்டும் என்று பேப்பர்காரனுக்காய் வாசலிலேயே நான் தவம் கிடப்பேன். நடுப்பக்கப் புதிர்கள், பலமுக மன்னன் ஜோ, எக்ஸ்ரே கண் ரே என்று சிறுவர் மலர் மட்டுமே என் உலகமாய் இருந்து வந்த காலம் அது. கொஞ்ச நாட்களில் சிறுவர் மலர் போரடிக்கா விட்டாலும், மொத்த புத்தகத்தையுமே நான் 10 நிமிடங்களில் படித்து முடித்து விடுமளவுக்கு பழகி விட, படக் கதைகள் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பால், என்னுடைய புத்தக வட்டம் மெல்ல ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று விரியத் தொடங்கியது.
இரும்புக் கை மாயாவி, ஸ்பைடர் மேன், கௌ பாய் டெக்ஸ் வில்லர், இரும்பு மனிதன் ஆர்ச்சி, லக்கி லுக் என்று என் ஆதர்ஷ கதா நாயகர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போனது. கடைசி வரை ஏனோ எனக்கு ஜேம்ஸ் பாண்டும், ரிப் கெர்பியும் பிடிக்காமலே போய் விட்டார்கள். ஆனால் அந்த வயதில் ரஜினிகாந்தோ, விஜயகாந்தோ என்னைக் கவர்ந்ததை விட இவர்கள்தான் என்னை அதிகம் கவர்ந்தார்கள்.இன்றும் என் நண்பர்கள் மத்தியில் நான் வேகமாகப் படிப்பவன் என்று பெயர் எடுத்திருப்பதற்கும், மசால் போண்டாவைச் சுற்றித்தந்த பேப்பராக இருந்தால் கூட, அதை குப்பைத்தொட்டியில் போடுவதற்கு முன்னால் என்ன எழுதி இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வத்திற்கும் இந்த சிறுவர் மலரும், காமிக்ஸ்களுமே காரணம் என்று சொல்லுவேன். Thanks to you My Dear Friends……….
இப்படியே போய்க் கொண்டிருந்த நேரத்தில், சரி என்னதான் இருக்குதுன்னு பார்ப்போமே ன்னு, ஒரு நாள் ஞானோதயம் வந்து நான் கையில் எடுத்த புத்தகம் ராஜேஷ்குமாரின் ஒரு துப்புறியும் நாவல். விவேக் துப்புறியும் அந்த நாவல் ஜெட் வேகத்தில் போக, அப்புறம் தேடித் தேடி ராஜேஷ் குமாரின் நாவல்களைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் எனக்கு என்னமோ ராஜேஷ்குமாரின் புத்தகங்கள் 10 க்கு 5 புத்தகங்கள் பிடிக்காமல் போக, என் கவனம் மெல்ல சுபாவிற்கும், ப.கோ.பி க்கும் தாவ ஆரம்பித்தது. பள்ளிக் கூடப் பருவத்தில் ஆரம்பித்த அந்த பழக்கம் இன்றும் அவ்வப் போது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நரேன் – வைஜயந்தி, ஜான்சுந்தர் – அனிதா,செல்வா – முருகேசன்,பரத் – சுசிலா, விவேக் – ரூபலா, விஷ்ணு இவர்கள பங்கு பெறும் எல்லாக் கதைகளையும் அனேகமாக நான் படித்திருப்பேன் என்று சொல்லலாம். இதைத் தவிர சுபா அவ்வப் போது எழுதும் ராணுவக் கதைகள் ஒன்றைக் கூட விட்டு வைக்க வில்லை.
சீரியஸான புத்தகங்களை மட்டுமே படிப்பவர்க்கு,இவையெல்லாம் சிறுபிள்ளைத்தனமான புத்தகங்களாகத் தோன்றினாலும், எனக்குள் மேலும் மேலும் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி விட்டவை இவையே. அந்த வகையில், வெகு ஜன வாசகர்கள் படிக்கும் இந்த நாவல்கள் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு சேவையை செய்து வருகின்றன என்றுதான் சொல்வேன். இப்படி வெறும் க்ரைம் நாவல்களையே படித்து வந்த நான் முதன் முதலில் படித்த சமூக நாவல் வெ.த.புகழேந்தி என்பவர் எழுதிய “மற்றபடி மனிதர்கள்” எனும் நாவலே. எத்தனை பேருக்கு இந்த நாவலும், இந்த ஆசிரியரும் பரிச்சயம் என்று எனக்குத் தெரிய வில்லை. ஆனால் புத்தகங்கள் வெறும் பொழுது போக்கிற்குத்தான் என்று அது நாள் வரை நான் வைத்திருந்த எண்னங்களை தவிடுபொடியாக்கியது இந்த புத்தகம். “புத்தகங்கள் நல்ல நண்பர்கள்” என்று எனக்குக் கற்றுக் கொடுத்தது கூட இந்த புத்தகம்தான்.
“மற்றபடி மனிதர்கள்” எனக்குள் கிளறி விட்ட நெருப்பு இன்று வரை அடங்க வில்லை. தி.ஜா, ஜெயகாந்தன், அசோகமித்திரன், பிரபஞ்சன், நீல பத்மநாபன், நா.பா, அகிலன், சாண்டில்யன், கல்கி, விக்கிரமன், கௌதம நீலாம்பரன், சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, ரா.கி.ரங்கராஜன், நல்ல பெருமாள் என நான் வாசித்த நாவலாசிரியர்களின் பெயர்கள் நீண்டு கொண்டே போவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது அந்த புத்தகம்தான்..
இவர்களில் பாலகுமாரனுக்கும், எண்டமூரி வீரேந்திரநாத்துக்கும் என் மனதில் எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. ஆன்மீகம் கலக்காமல், மனிதர்களின் மனதில் உட்புகுந்து, உளவியல் ரீதியாக பாலகுமாரன் எழுதிய பல கதைகளை சோறு தண்ணி இல்லாமல், விடிய விடிய படித்திருக்கிறேன். க்ரைம் கதைகளை எழுதினாலும், எண்டமூரியினுடைய ஒரு சில கதைகள் என்னை ரொம்ப நேரம் யோசிக்க வைத்திருக்கின்றன.இவருடைய நடையும், பாலகுமாரனுடைய நடையும் முற்றிலும் வேறு வேறு என்றாலும், மனித எண்ணங்களை psychological ஆக approach செய்து அதை அழகாக வார்த்தையால் வடிப்பதில் இருவருமே சளைத்தவர்கள் இல்லை.
அந்த வகையில் எனக்குப் பிடித்த சில புத்தகங்களை நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.
மற்றபடி மனிதர்கள் – 1981 ல் மீனாட்சி புரம் எனும் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்டோர் ஒட்டு மொத்தமாக இஸ்லாமிற்கு மாறியதை பிண்ணணியாக கொண்டு எழுதப் பட்ட நாவல் இது. “அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்ற கருத்தை எனக்குள் உரமேற்றிய புத்தகம் இது.
தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி அவர்களால் எழுதப் பட்ட நாவல் இது. இன்றும் எப்போதாவது யாருடைய பாதங்களையாவது நான் பார்க்க நேர்ந்தால், என்னையும் அறியாமல் இப்புத்தகத்தின் பெயர் என் மனதினுள் ஓடும். இவரது மற்ற புத்தகங்கள் எனக்கு அந்த அளவிற்கு பிடிக்காமல் போயிருந்த கால கட்டத்தில், என் தங்கைக்கு கல்லூரியில் துணைப் பாடமாக இந்த புத்தகத்தைக் கொடுத்து விட்டதால், என் ச்கோதரியின் தொல்லை தாங்காமல் படிக்க ஆரம்பித்த புத்தகம் இது. படித்து முடித்தவுடன் என்னுள் தோன்றிய கேள்வி “இவரா மற்றதையும் எழுதினார் என்பதுதான்?”
குருஷேத்திரம் – ர.சு. நல்லபெருமாள் அவர்கள் பத்திரிக்கைத் தொழிலையும், கம்யூனிசத்தையும் பிண்ணனியாகக் கொண்டு எழுதிய நாவல் இது. பத்திரிக்கைத் தொழில் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்திய நூல் இது. இவர் எழுதிய இன்னொரு புத்தகம் (பெயர் தெரிய வில்லை) சித்தார்த்தன் அரண்மனையை விட்டு வெளியேறிய பின்பு, புத்தராக ஞானோதயம் பெறுவதற்கு முன்பு உள்ள இடைப் பட்ட காலத்தில் என்ன நடந்தது என்ற் ஒரு கற்பனையுடன் எழுதப்பட்ட நாவல். இன்று வரை மறு வாசிப்பிற்கு தேடிக் கொண்டிருக்கிறேன்.
மணிக்கொடி – ஜோதிர்லதா கிரிஜா அவர்களால் சுதந்திரப் போராட்டத்தை மையமாகக் கொண்டு எழுதப் பெற்ற ஒரு வரலாற்று நாவல் இது. காந்திய சிந்தனைகள் மீது எனக்குள் ஓர் ஈர்ப்பினை ஏற்படுத்திய நாவல். இந்த நாவல் சாகித்ய அகாடமி பரிசினை பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன். ர.சு நல்ல பெருமாள் எழுதிய “கல்லுக்குள் ஈரம்” நாவலும் காந்திய சிந்தனைகளைப் பற்றிய ஏறக்குறைய இதே காலகட்டத்தை மையமாகக் கொண்ட நாவல்தான். எழுத்து நடையும் இரு நாவல்களிலும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும். பல தலைவர்களைப் பற்றிய தகவல்கள் இந்த நூல்களில் வெகு சரளமாக வந்து போகும்.
சாண்டில்யன் – இவரது மன்னன் மகள், கன்னிமாடம்,கடல் புறா போன்ற வரலாற்று நாவல்களை நான் எத்தனை முறை படித்திருக்கிறேன் என்று எனக்கேத் தெரிய வில்லை. பத்து பக்கங்களிற்கு கூட வெறுமனே வர்ணணையாக மட்டுமே இவர் எழுதியுள்ள பல நாவல்கள் எனக்குக் கற்றுத் த்ந்த சொல்லாடலும், உவமைகளும் ஏராளம்.
பொன் அந்தி – எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களால் மருதநாயகத்தை நாயகனாகக் கொண்டு எழுதப் பெற்ற வரலாற்று நாவல். கமல் முதன் முதலில் மருத நாயகம் படம் எனது கனவு என்று சொன்னபோது, இந்தப் பெயர் அந்தளவிற்கு எனக்குப் பரிச்சயப் படாததால், யார் இவன்? என்றுதான் நினைத்தேன். இந்த நாவலை படித்து முடித்த போது, கமல் ஏன் அவ்வளவு வெறியாக இருந்தார் என்றுப் புரிந்துக் கொள்ள முடிந்தது.
லேடிஸ் ஹாஸ்டல் – கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு தமிழில் வெகு சில நாவல்களே வந்துள்ளன. அவற்றில் மிக முக்கியமானது இந்த லேடிஸ் ஹாஸ்டல். நான் படித்த முதல் எண்டமூரி வீரேந்திரநாத்தின் நாவலும் இதுதான். இக்கதையின் நாயகி கிரண்மயி யின் கேரக்டரைசேஷன் என்னைக் கொள்ளைக் கொண்ட ஒன்று. இன்றும் எனக்கு மிகப் பிடித்த நாவல்களில் இதுவும் ஒன்று. கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட எனக்குத் தெரிந்த மற்றொரு நாவல் வெ.த.புகழேந்தியின் “வீணையடி நீ எனக்கு” எனும் நாவல். இதில் நடு நடுவே பாரதியின் வரிகள் மிக அழகாகக் கையாளப்பட்டிருக்கும்.
அந்தர் முகம் – இதை ஒரு psychological நாவல் என்று சொல்லலாம். மரணத்தின் விளிம்பில் தள்ளாடிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனின் மனதில் ஏற்படும் உணர்வுகளை இத்தனை அருமையாகச் சொல்ல முடியுமா என்று என்னை வியக்க வைத்த நாவல் இது. எண்டமூரியின் மற்றுமொரு மாஸ்டர் பீஸ் என்று நான் சொல்லுவேன். இவர் எழுதிய “நிகிலா” மற்றும் “பந்தம் பவித்ரம்” நாவல்கள் பெண்ணியத்தின் மீது என்னைத் திரும்ப வைத்த நாவல்கள்.
இரும்புக்குதிரைகள் – பாலகுமாரனின் மாஸ்டர் பீஸ் இது. இந்த புத்தகத்தை படித்த அடுத்த பத்து நாட்களிற்கு என்னால் சரியாகத் தூங்க முடியவில்லை. குதிரையை வைத்து இவர் எழுதிய கவிதைகள், இவருக்குள்ளே இருந்த நல்ல கவிஞரை எனக்கு அடையாள்ம் காட்டியவை. இவர் எழுதிய பல நாவல்கள் எனக்குப் பிடித்திருந்தாலும், மெர்க்குரிப் பூக்கள், பயணிகள் கவணிக்கவும், கரையோர முதலைகள், நிலாவே வா, இனிது இனிது காதல் இனிது, திருமணமான என் தோழிக்கு ஆகிய நாவல்கள் எனக்குக் கற்றுத் தந்தவை ஏராளம். அவற்றைப் பட்டியலிட்டால் நான் பத்து பதிவுகளைப் போட வேண்டி இருக்கும்.
உடையார் – இனி பாலகுமாரனே நினைத்தாலும் இப்படி ஒரு நாவலை எழுத முடியுமா என்பது சந்தேகமே. பொன்னியின் செல்வன் படித்து முடித்ததும், அவ்வளவுதானா? எனும் ஒரு ஏக்கம் நெஞ்சினுள்ளே ஓட, இதன் தொடர்ச்சி என்னவாய் இருக்கும் என்றுத் தேடித் தேடி விக்கிரமனின் “நந்திபுரத்து நாயகி” படித்த பின்பு ஏனோ அது அந்தளவுக்கு என்னைக் கவராமல் போய்விட்ட நிலையில் என் கையில் கிடைத்த நாவல்தான் இந்த உடையார். காதலையும், வீரத்தையும் மட்டுமே சரித்திரமாகப் பார்த்திருந்த எனக்கு, வரலாற்றின் பல அரிய பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமை இந்த புத்தகத்தையே சேரும். ஒரு வரியில் சொல்வதென்றால் இது எல்லாம் புத்தகமே இல்லீங்க. பொக்கிஷம்.
பி.கு: இதில் இடம் பெறாத மற்ற புத்தகங்கள் எல்லாம் என்னைக் கவரவில்லை என்று அர்த்தம் இல்லை. அவை இந்த தருணத்தில் எனக்குத் தோன்ற வில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் புத்தகங்களைப் பற்றிய உங்களது கருத்துக்களை முடிந்தால் தெரியப்படுத்துங்கள். அதேப் போன்று உங்களுக்குப் பிடித்த புத்தகங்களைப் பற்றி பின்னுட்டத்தின் மூலமாகவோ, பதிவின் மூலமாகவோ சொல்லுங்களேன். நாம் பகிர்ந்துக் கொள்ளலாம்.